கொரோனாவில் இருந்து குணமாகி மீண்டும் பணியில் சேர்ந்த சென்னை செவிலியர் கொரொனாவால் மரணம்
- IndiaGlitz, [Sunday,June 14 2020]
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் வாழ்பவர்கள் ஒருவித அச்சத்துடனேயே தற்போது வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமன்றி மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் ஒரு சிலர் பலியாகி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த 54 வயது செவிலியர் ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த 54 வயது செவிலியர் கண்காணிப்பாளர் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் கொரோனாவால் பாதிக்கபட்டு அதன்பின் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமானார்.
கொரோனாவில் இருந்து குணமாகிவிட்ட நிலையில் மீண்டும் பணியில் அவர் சேர்ந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டாவது முறையாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
கொரோனாவால் பாதிப்படைந்து, குணமாகி மீண்டும் பணியில் சேர்ந்த செவிலியர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.