தமிழகம் முழுவதும் இன்று முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வேலைநிறுத்தம்
- IndiaGlitz, [Tuesday,October 03 2017]
கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்ததால் தமிழகத்தில் திரையரங்குகளின் கட்டணம் ஏற்கனவே ரூ.150க்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில் தற்போது மாநில அரசின் கேளிக்கை வரி விதிப்பு காரணமாக மீண்டும் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி அமலுக்கு வந்துள்ளது. இதன்படி தமிழ்ப்படங்களுக்கு 10% கேளிக்கை வரியும், பிறமொழி திரைப்படங்களுக்கு கேளிக்கை 20% வரியும் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பின் காரணமாக பிறமொழி திரைப்படங்களை அதிகம் திரையிடும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்பதால் இன்று முதல் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளது. இந்த தகவலை இந்திய மல்டிபிளக்ஸ் சங்கத்தலைவர் தீபக் அஷர் அறிவித்துள்ளார்
வேலைநிறுத்தம் காரணமாக ஒருசில மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஒருசில மல்டிபிளக்ஸ் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் நாளை நடைபெறும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் கூட்டத்திற்கு பின்னரே தங்களது முடிவை அறிவிக்கவிருப்பதாக ஒருசில மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.