சென்னை மெட்ரோ ரயிலில் ஏசி கட்! பயணிகள் அதிருப்தி
- IndiaGlitz, [Tuesday,May 28 2019]
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகிய மெட்ரோ ரயில் சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. மெட்ரோ ரயில் இயங்க தொடங்கியதில் இருந்தே சென்னையில் டிராபிக் பிரச்சனை பாதி குறைந்துள்ளது. மேலும் கோடை வெயிலில் பேருந்துகளில் பயணம் செய்வதால் கடும் அவஸ்தைக்கு உள்ளாக நேரிடும். ஆனால் கட்டணம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் குளுகுளு ஏசியில் டிராபிக் பிரச்சனை இன்றி குறித்த நேரத்தில் பயணம் செய்ய உதவியாக இருக்கும் மெட்ரோ ரயிலுக்கு சென்னை மக்களின் ஆதரவு தொடரந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதன் காரணமாக கூட்டம் அதிகம் இல்லாத மதிய நேரங்களில் மெட்ரோ ரயிலில் ஏசி நிறுத்த மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மெட்ரோ ரயில்களில் ஏசிக்காகவே தினமும் 9000 லிட்டர் தண்ணீர் செலவாகி வரும் நிலையில் இந்த நடவடிக்கை மூலம் 30% தண்ணீர் தேவையை மிச்சப்படுத்தலாம் என்பதால் மெட்ரோ நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
தண்ணீர் சேமிப்புக்காக மெட்ரோ நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தாலும் அதிக கட்டணம் கொடுத்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதே ஏசிக்காகத்தான் என்றும், ஏசியை அணைத்து வைத்தால் பயணிகள் சிரமப்பட நேரிடும் என்றும் பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.