கொரோனா எதிரொலி: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய வசதி

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 1 முதல் நிபந்தனைகளுடன் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக பேருந்துகளும் ரயில்களும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் சென்னையில் மெட்ரோ ரயில்சேவை தொடங்கும்போது பயணிகள் இடையே கொரோனா தொற்று பரவாமல் இருக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள லிஃப்டுகளை கைகளுக்கு பதில் கால் விரல்கள் மூலம் இயக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கைகளால் லிப்ட்களை இயக்கும்போது கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் சென்னை மெட்ரோ ரயில் இந்த மாற்று வழியை செயல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே முதல் முறையாக கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக தலைமை அலுவலகத்தில் இந்த லிப்ட் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், இதேபோன்று அனைத்து ரயில் நிலையங்களிலும் காலால் இயக்க கூடிய லிப்ட் பொருத்தப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.