சென்னை மேயராகும் ப்ரியா பற்றிய முழு விபரங்கள் இதோ!
- IndiaGlitz, [Thursday,March 03 2022]
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றன என்பதும் அதேபோல் சென்னை உள்பட 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி கைப்பற்றியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சென்னை நகர மேயர் வேட்பாளராக திமுகவை சேர்ந்த ப்ரியா என்ற இளம்பெண் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பிரியாவின் முழு விவரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னை மேயர் தொகுதி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவை சேர்ந்த பிரியா வடசென்னையில் உள்ள மங்களபுரம் என்ற பகுதியில் 74 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சென்னை தேனாம்பேட்டை 98 வது வார்டு கவுன்சிலர் பிரியதர்ஷ்னியை அடுத்து இளம் கவுன்சிலர் இவர்தான். பொதுவாகவே சினிமா முதல் நாவல் வரை வடசென்னை என்றாலே ரவுடிகள் இருக்குமிடம், அராஜகம் செய்யும் இடம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அந்த பகுதியில் இருந்து ஒரு இளம்பெண் சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் வட சென்னை பகுதியில் குடிநீர் பிரச்சனை, கொசுத்தொல்லை, கால்வாய் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரே மேயராகியுள்ள வடசென்னை விரைவில் நல்ல முன்னேற்றம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
28 வயது இளம்பெண்ணான ப்ரியாவின் தந்தையும் திமுக பிரமுகர் தான். திமுக இணைச் செயலாளராக இருந்து வரும் ஆர்.ராஜன் மகளான ப்ரியா, கன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டம் படித்தவர். சென்னை மாநகர மேயர் வேட்பாளராக தன்னை தேர்வு செய்ததற்கு தனது தலைவருக்கு நன்றி என்று பதிவு செய்துள்ள ப்ரியா, புதிய இளம் தலைவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு அதிகம் வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை மேயராக பதவியேற்க இருக்கும் வடசென்னையை சேர்ந்த பிரியாவுக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வடசென்னை பகுதியில் நிலைமை எப்படி என்று பிரியாவுக்கு தெரியும் என்பதால் அவர் கண்டிப்பாக வடசென்னை பகுதியை மட்டுமன்றி சென்னை முழுவதுமே முன்னேற்றம் காண நடவடிக்கை எடுப்பார் என்று அந்த பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.