சென்னை சலூன் கடைக்காரருக்கு கொரோனா தொற்று: வாடிக்கையாளர்களுக்கு வலைவீச்சு
- IndiaGlitz, [Tuesday,April 28 2020]
சென்னையில் சலூன் கடை வைத்திருந்த ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது வாடிக்கையாளர்களுக்கும் கொரொனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் கோயம்பேடு அருகே சலூன் கடை வைத்துள்ளார். ஊரடங்கையும் மீறி இவர் கடை திறந்து வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி திடீரென சலூன் கடைக்காரருக்கு கொரொனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சோதனைக்கு உள்ளானார். இந்த சோதனையின் முடிவில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து கோயம்பேடு போலீசார் அவரிடம் முடி வெட்டிய மற்றும் அவரிடம் தொடர்பு கொண்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சலூன் கடையில் மட்டுமின்றி ஒரு சிலருக்கு வீடுகளுக்கும் சென்று அவர் முடி வெட்டிய தெரிகிறது. வளசரவாக்கம், நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இவரிடம் முடிவெட்டிய சுமார் 32 பேர்களை இதுவரை கண்டுபிடித்து அவர்களுக்கு கொரொனா சோதனையை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அவரிடம் முடிவெட்டியவர்கள் குறித்த தகவல்களையும் சேகரித்து அவர்களையும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சலூன் கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.