சென்னை வாக்காளர்களுக்கு என்ன ஆச்சு? தமிழத்திலேயே குறைந்த சதவீதம்!
- IndiaGlitz, [Friday,April 19 2019]
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவிக்கையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 70.90% வாக்குப்பதிவும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது தமிழகத்தில் 73.58% வாக்குகள் பதிவான நிலையில் இம்முறை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சென்னையின் மூன்று தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. தென்சென்னையில் 57.43 சதவிகிதமும், மத்திய சென்னையில் 57.86 சதவிகிதமும், வட சென்னையில் 61.76 சதவிகிதமும், பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே தென்சென்னை மற்றும் மத்திய சென்னையில்தான் குறைவான சதவிகிதத்தில் வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவிற்கும் தமிழத்திலேயே சென்னையில் தான் அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் நடந்து செல்லும் அளவுக்கு குறைவான தூரங்களில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் சென்னை மக்கள் சுமார் 40 சதவிகிதத்தின் வாக்களிக்க வரவில்லை.
ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் அரசியல் பேசும் சென்னைவாசிகள், நிஜத்தில் ஜனநாயக கடமை ஆற்றுவதில் தவறியுள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய ஒன்று என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் குழப்பம் இருந்தது, கடுமையான வெயில் ஆகியவையே வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணமாக கூறப்படுகிறது.