குடியுரிமை சட்ட போராட்டம்: நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சென்னை ஐஐடி மாணவர் 

  • IndiaGlitz, [Tuesday,December 24 2019]

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்த சென்னை ஐஐடி மாணவர் ஒருவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் போராடி வருகின்றனர். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது மாணவர்கள் தங்கள் கைகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பதாகைகளை கையில் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போராட்டத்தில் சென்னை ஐஐடியில் படித்து வரும் ஜெர்மனியை சேர்ந்த ஒரு ஜேக்கப் லின்டென்தல் என்ற மாணவரும் கலந்து கொண்டார். அவர் தனது கையில் வைத்திருந்த பதாகையில் ஜெர்மனியின் நாஜி குறித்த ஒரு சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் அவர் விசா விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனையடுத்து சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற ஜேக்கப் லின்டென்தல், அங்கிருந்து ஜெர்மனி சென்றார்

முன்னதாக நாட்டை விட்டு கிளம்பும் முன் அவர் கூறியபோது, ‘மக்களின் உரிமை போராட்டத்தில் மனிதத்தன்மையுடன் கலந்து கொண்டதாகவும், ஆனால் தன்னுடைய விளக்கத்தை குடியுரிமை அதிகாரிகள் ஏற்காததால் நாட்டை விட்டு செல்வதாகவும் தெரிவித்தார்.