200 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் கஷ்டம்: சென்னையின் நிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்
- IndiaGlitz, [Monday,May 20 2019]
சென்னையில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர்கஷ்டம் இருந்து வரும் நிலையில் ஃபானி புயலால் மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புயலும் ஒடிஷா பக்கம் திரும்பிவிட்டதால் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. மற்ற நகரங்களிலாவது ஓரளவிற்கு கோடை மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் சுத்தமாக மழை இல்லாத்தால் நீர் ஆதாரங்களான ஏரி, குளம் வறண்டு வருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத குறைந்த நீர்மட்டம் சென்னை ஏரிகளில் இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
சென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரப்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 கன அடிகள் ஆனால் இந்த ஏரியில் தற்போது ஒரே ஒரு கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. செங்குன்றம் ஏரியில் 28 கன அடியும், சோழாபுரம் ஏரியில் 4 கன அடியும் மட்டுமே தண்ணீர் உள்ளது. அதிர்ஷ்டவசமாக பூண்டி ஏரியில் மட்டும் 118 கன அடி தண்ணீர் உள்ளது. ஆனாலும் இந்த தண்ணீர் சென்னையின் தேவையை பூர்த்தி செய்யாது.
வரும் ஜூன் மாதம் வெப்பச்சலனம் காரணமாகவும், அதன் பின்னர் ஆகஸ்ட், செப்டம்பரில் மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும் சென்னையின் முழு தண்ணீர் தேவையை இந்த மழையால் தீர்க்க முடியாது. எனவே ஓரளவு பெய்யும் மழை நீரை சேமித்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதே இப்போதைக்கு ஒரு தீர்வாக இருக்கும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.