லீலா மணிமேகலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை: இது 'காளி' விவகாரம் அல்ல, இயக்குனர் விவகாரம்!

  • IndiaGlitz, [Tuesday,July 05 2022]

கடந்த இரண்டு நாட்களாக லீனா மணிமேகலை இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் ‘காளி’ வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்ற போஸ்டர் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் லீனா மணிமேகலைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னைப் பற்றி எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறாக லீனா மணிமேகலை, சின்மயி உள்ளிட்டோர் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதாக இயக்குனர் சுசி கணேசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுசி கணேசன் மனுவில் முகாந்திரம் இருப்பதாக கூறி லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட தடைவிதித்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘உயர் நீதிமன்றம் தடை விதித்த பின்னரும் லீனா மணிமேகலை தொடர்ந்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சுசி கணேசனின் வழக்கறிஞர் வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ’உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தவறான கருத்துக்களை ஏன் வெளியிடுகின்றனர் என்றும் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என லீலா மணிமேகலைக்கு வழக்கறிஞர் அறிவுறுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இது குறித்து ஜூலை 21-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறி இவ்வழக்கை ஒத்திவைத்தார்.

ஏற்கனவே ‘காளி’ விவகாரத்தில் லீனா மணிமேகலையின் பெயர் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வரும் நிலையில் தற்போது உயர்நீதிமன்றத்தின் எச்சரிக்கை செய்தியும் ஊடகங்களில் இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.