ஊதியம் திருப்தி இல்லை என்றால் வேறு வேலை பாருங்கள்! பஸ் ஊழியர்களுக்கு நீதிபதி எச்சரிக்கை
- IndiaGlitz, [Friday,January 05 2018]
தமிழக போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தமிழக அரசுக்கு இடையே நடந்த ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென ஊழியர்கள்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இன்றி நடந்த இந்த வேலை நிறுத்தம் காரணமாக அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து கொண்ட சென்னை ஐகோர்ட் நீதிபதி இந்திராபானர்ஜி, 'வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதி இந்த மனு குறித்து கூறியதாவது:
போக்குவரத்து ஊழியர்கள் ஊதியம் திருப்தியாக இல்லை என்று கருதினால் வேறு வேலை பார்த்து கொள்ளவும் என்று கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார். தொழிற்சங்கங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, பணிக்கு வராத ஊழியர்கள் மீது சஸ்பெண்ட், டிஸ்மிஸ் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று எச்சரித்தார். அத்தியாவசிய பணிகள் பாதிப்பு என்ற பிரிவில் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.