வைரமுத்து மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை: சென்னை ஐகோர்ட்
- IndiaGlitz, [Friday,January 19 2018]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த கருத்தரங்கில் கூறியது தனது கருத்து இல்லை என்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளரின் கருத்தை மட்டுமே தான் மேற்கோள் காட்டியதாகவும், இருப்பினும் தான் தெரிவித்த கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் வைரமுத்து தெரிவித்திருந்தார்.
வைரமுத்துவின் வருத்ததிற்கு பின்னும் அவரை கடுமையாக பாஜக மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வந்தனர். மேலும் இதுகுறித்து வைரமுத்து மீது சென்னை கொளத்தூர் மற்றும் இராஜபாளையம் ஆகிய இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
இந்த நிலையில் தன்மீது பதிவு செய்யபட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வைரமுத்து சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை சற்றுமுன் நடந்தபோது, இதுகுறித்து கருத்து கூறிய சென்னை ஐகோர்ட் நீதிபதி, 'ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஆராய்ச்சி கட்டுரையைத்தான் வைரமுத்து மேற்கோள் காட்டியுள்ளார். வைரமுத்து மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை' என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அரசு வழக்கறிஞர் இந்த வழக்கு குறித்து வாதாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.