தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளுக்கு தடையா? உயர்நீதிமன்றம் அதிரடி
- IndiaGlitz, [Wednesday,June 10 2020]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. காலை, மாலை என இருவேளைகளிலும் ஒரு சில மணி நேரங்கள் இந்த ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருவதாகவும் மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே மொபைல் போன், டிவி அல்லது கம்ப்யூட்டரில் இருந்து இந்த ஆன்லைன் வகுப்புகளை பார்த்து பாடங்களை படித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகவும், எனவே ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கேட்டுக்கொண்டனர். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுப்பதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் பாதுகாப்பான ஆன்லைன் கல்விக்கு என்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது