மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- IndiaGlitz, [Friday,March 13 2020]
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனால் சாலையில் நடந்து செல்லும் அப்பாவிகள் கூட பாதிக்கப்படுவதாகவும், சிலசமயம் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர்களுடைய லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட தொகை அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களை கைது செய்வதற்கு பதிலாக அவர்கள் குடிக்காமல் இருக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடலாமே என்றும், மதுக்கடைகள் இருப்பதால் தானே குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகின்றனர், மதுக்கடைகளே இல்லை என்றால் அவர்கள் எவ்வாறு குடிப்பார்கள்? இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்