'தலைவி', 'குயின்' பட நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,December 12 2019]

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ.எல்.விஜய் 'தலைவி' என்ற டைட்டிலில் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் எம்.ஜி.ஆர் கேரக்டரில் அரவிந்தசாமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதேபோல், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் கௌதம் மேனன் 'குயின்' என்ற டைட்டிலில் இணைய தள தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த தொடரில் ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தலைவி, குயின் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் தடை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், குயின்' இணைய தள தொடரில் தீபா கேரக்டர் இடம் பெறவில்லை என்ற கௌதம் மேனன் தரப்பு உத்தரவாதத்தை ஏற்ற ஐகோர்ட், 'தலைவி' திரைப்படத்துக்கும், 'குயின்' இணைய தள தொடருக்கும் தடையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

மேலும் 'தலைவி' படத்தின் கதை முழுக்க முழுக்க கற்பனையானது என அறிவிப்பு வெளியிடவும் பட நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தலைவி, குயின் ஆகிய இரண்டுக்கும் இனி தடையில்லை என்பது உறுதியாகியுள்ளது