'தர்பார்' படத்திற்கு தடையா? சென்னை ஐகோர்ட் உத்தரவால் பரபரப்பு
- IndiaGlitz, [Friday,January 03 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்’ திரைப்படம் வரும் 9ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் சென்சார் பணிகள் உள்பட ரிலீசுக்கு தேவையான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இந்த படத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனு ஒன்றில் ’லைக்கா நிறுவனம் தயாரித்த 2.0 என்ற படத்தை மலேசியாவில் திரையிடவும், விநியோகம் செய்யவும் ரூ.20 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் ஆனால் படம் ரிலீசாக தாமதமானதால் தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்திற்கு வட்டி தருவதாக நிறுவனம் லைக்கா ஒப்புக்கொண்டதாகவும், இதனையடுத்து 12 கோடி ரூபாய் படத்திற்கு கூடுதலாக தங்கள் நிறுவனம் லைக்காவிற்கு அளித்ததாகவும் இவை அனைத்தும் சேர்த்து ரூபாய் 23.7 கோடி ரூபாய் லைக்கா நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு தர வேண்டும் என்று அந்த பணத்தை திரும்ப தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அதுவரை லைக்கா நிறுவனம் தயாரித்த தர்பார் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்ற போது இந்த மனுவுக்கு பதிலளிக்க லைக்கா நிறுவனம் அவகாசம் கோரியது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது லைகா நிறுவனம் பதில் மனுவை தாக்கல் செய்தது. இதனையடுத்து இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்த படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்கப்படவில்லை என்பதால் திட்டமிட்டபடி வரும் 9ஆம் தேதி தர்பார் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.