10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Friday,May 15 2020]
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார். மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பேருந்து உள்பட அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்றும் மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு சற்று முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் தொடர்ந்த பொதுநல வழக்கை எப்படி அனுமதிக்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி கேட்டதை அடுத்து மனுதாரர் தான் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதி கோரினார்
இதனை அடுத்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால் தமிழக அரசு திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது