லைகாவின் 'இந்தியன் 2' வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
- IndiaGlitz, [Thursday,October 28 2021]
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சுபாஷ்கரன் அவர்களின் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது என்பதும் ஒரு கட்டத்தில் லைக்கா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராம்சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க முடிவு செய்த நிலையில் லைகா நிறுவனம் இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. ‘இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்று பதிவு செய்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த பிரச்சனையை மத்தியஸ்தம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது லைகா தரப்பில் ‘இந்தியன் 2’ பிரச்சனையை சுமூகமாக முடிப்பதற்கு நீதிபதி பானுமதி அவர்களின் மத்தியஸ்த நடைமுறையில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்த போவதில்லை என்றும் உத்தரவாதம் அளித்தது.
இந்த நிலையில் ஷங்கர் தரப்பிலும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை முடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் லைகா நிறுவனம் மற்றும் ஷங்கர் இடையேயான பிரச்சனைக்கு நீதிபதி ஆர் பானுமதி தலைமையில் மத்தியஸ்தம் செய்து அதன் மூலம் தீர்வுகாண காணும்படி அறிவுறுத்தி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உள்ளது.
எனவே இன்னும் ஒரு சில நாட்களில் இந்த பிரச்சனை தீரும் என்றும் ’இந்தியன் 2’ திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.