ஊரடங்கில் டாஸ்மாக் திறப்பது போல அல்ல 10ம் வகுப்பு தேர்வு: நீதிபதிகள் அதிரடி கருத்தால் பரபரப்பு
- IndiaGlitz, [Monday,June 08 2020]
பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் 15ஆம் தேதி நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக நடத்தி வந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது தமிழக அரசிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் எப்படி ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்றும், பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களை மாநில அரசை மீறலாமா என்றும், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தமிழக அரசு கவனிக்கவில்லையா என்றும், 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயத்தில் அரசு அலட்சியமாக இருக்கலாமா என்றும் அடுக்கடுக்காக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
மேலும் 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட அனுமதிக்க முடியாது என்றும் கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வை நடத்தலாம் என்றும் ஜூலை இரண்டாவது வாரத்தில் தேர்வை நடத்தலாமா? என்பதை பிற்பகல் 2.30 மணிக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் ஊரடங்கில் டாஸ்மாக் திறப்பது போல் அல்ல, பத்தாம் வகுப்பு தேர்வு என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ஆம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்றும் தமிழக அரசு இதுகுறித்து 2.30 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவின் காரணமாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவசரமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கு பின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்றும் பிற்பகல் 2.30 மணிக்கு இதுகுறித்து தமிழக அரசு தனது நிலையை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது