சிம்பு தொடர்ந்த 1 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு: ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு!
- IndiaGlitz, [Wednesday,March 09 2022]
சிம்பு தொடர்ந்த ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிம்பு நடித்த ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக கூறி சிம்பு புகார் அளித்திருந்தார். அதேசமயம் இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததற்கு சிம்பு தான் காரணம் என்றும் அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை பதிவு செய்து வருவதாக கூறி சிம்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழக்கை பதிவு செய்தார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், அப்போதைய நடிகர் சங்க தலைவர், தயாரிப்பாளர் சங்க தலைவர் உள்ளிட்டோரை எதிர்மனுதாரர் சிம்பு சேர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மூன்று வருடங்களாகியும் எழுத்துபூர்வமான வாதத்தை தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யாததால் ரூபாய் ஒரு லட்சம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தொகையை வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதி இந்த வழக்கை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.