லதாரஜினி பள்ளி குறித்து நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு
- IndiaGlitz, [Tuesday,August 22 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பள்ளியின் கட்டிடத்திற்கு கடந்த சில வருடங்களாக வாடகை தரவில்லை என்று கூறி அந்த கட்டிடத்தின் உரிமையாளர் கடந்த 16ஆம் தேதி பூட்டு போட்டார். இதனால் அந்த பள்ளியின் மாணவர்கள் தற்காலிகமாக வேளச்சேரி பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் லதாரஜினி பள்ளியின் செயலாளர் ஐஸ்வர்யா தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பள்ளியின் கட்டிடத்திற்கு அதன் உரிமையாளர் பூட்டுப் போட்டதால் பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அந்த உரிமையாளர் இழப்பீடாக ரூ.5 கோடி ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்றும் பள்ளியின் பூட்டை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கட்டட உரிமையாளருக்கு உத்தரவிட்டதோடு, பிற்பகல் 3 மணிக்குள் பள்ளிக் கட்டடத்தின் சீல் அகற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து வழக்கறிஞர் ஆணையர் குழு நேரில் ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.