'அயலான்' படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!

  • IndiaGlitz, [Thursday,January 11 2024]

சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ’அயலான்’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் எம்எஸ் சேலஞ்ச் என்ற நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் குறித்து 1.5 கோடி ரூபாய் ’அயலான்’ தயாரிப்பு நிறுவனம் செலுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது ’அயலான்’ படத்திற்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், ஜனவரி 11-ம் தேதிக்குள் பணத்தை செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்தாவிட்டால் ’அயலான்’ திரைப்படத்திற்கு தடை தொடரும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் எம்.எஸ். சேலஞ்ச் விளம்பர பட நிறுவனத்திற்கு 50 லட்சம் செலுத்தப்பட்டதாகவும் மீதமுள்ள தொகை ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் செலுத்த உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த உத்தரவாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டதை அடுத்து ’அயலான்’ திரைப்படத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். எனவே நாளை திட்டமிட்டபடி அயலான் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.