ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
- IndiaGlitz, [Thursday,December 29 2016]
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். முதலில் நீர்ச்சத்து குறைபாடு, தொற்று நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் அவர் படிப்படியாக குணமாகி வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தது. ஆனால் திடீரென டிசம்பர் 5ஆம் தேதி அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுகவில் உள்ள சிலர் உள்பட பலர் சந்தேகம் எழுப்பினர். மேலும் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதாவின் மறைவு குறித்து நீதிபதி வைத்தியநாதன் தன் சொந்த கருத்தாக கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. ‛அவர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைபயிற்சி மேற்கொள்கிறார்' என, செய்திகள் வெளியாகின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரை பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.