மே 2 வாக்கு எண்ணிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- IndiaGlitz, [Friday,April 30 2021]
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடத்தப்பட்டு மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
ஆனால் இத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாகவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். மேலும் இதுகுறித்து கிருஷ்ணசாமி அளித்த மனுவில், மே 2 ஆம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து இருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அதில் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை மே 2 ஆம் தேதி எண்ணுவதற்கு தடையில்லை என நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதோடு பணப்பட்டுப்வாடா தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரியதையும் நீதிபதிகள் நிராகரித்து உள்ளனர். இதனால் வரும் மே 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.