தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: திமுக அரசுக்கு எதிரான மனு விசாரணை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022ம் ஆண்டு தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.
அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது இளம் பெண் ஸ்னோலின் என்பவரின் தாய் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி காவல் துறையினர், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதியவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மனுவில் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ மேல் விசாரணை நடத்தி வருகிறது எனவும் கூறி பதில்மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக மனுதாரர் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை ஏப்ரல் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout