மெரீனாவில் போராட்டம்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
- IndiaGlitz, [Saturday,April 28 2018]
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை மெரீனாவில் நடத்திய பிரமாண்டமான ஜல்லிக்கட்டு போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் நடந்த போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே போராட்டமும் அதுதான். இந்த போராட்டத்தின் விளைவாக தமிழக முதல்வரே டெல்லி சென்று ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான தனிச்சட்டம் இயற்றும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த போராட்டத்திற்கு பின்னர் மெரீனாவில் வேறு போராட்டங்கள் நடத்த காவல்துறை அனுமதி தரவில்லை. இந்த நிலையில் சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் என்று விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணைக்கு பின்னர் சென்னை மெரினாவில் அய்யாக்கண்ணு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து சென்னையில் ஒன்றரை ஆண்டுக்கு பின்னர் மீண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.