ஜப்தி செய்ய வேண்டிய நிலை வரும்: சிம்புவுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Saturday,September 01 2018]

வாங்கிய முன்பணத்தை திருப்பி தராவிட்டால் சிம்புவின் கார் முதல் செல்போன் வரை அனைத்தையும் ஜப்தி செய்ய வேண்டிய நிலை வரும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்துள்ளது.

நடிகர் சிம்பு 'அரசன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அதற்காக ரூ.50 லட்சம் பேசன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்திடம் முன்பணம் பெற்றுள்ளார். ஆனால் ஒப்பந்தப்படி சிம்பு கால்ஷீட் தராமல் இழுத்தடித்ததாகவும், இதனால் இந்த படத்தை திட்டமிட்டபடி தயாரிக்க முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. மேலும் தாங்கள் கொடுத்த முன்பணத்தை வட்டியுடன் சிம்புவிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது 'குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் பெற்று கொண்டது உண்மைதான் என்றும், ஆனால் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டபடி படத்தை தொடங்கவில்லை என்றும் சிம்பு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், ' நடிகர் சிம்பு 4 வாரங்களுக்குள் முன்பணமாக பெற்ற ரூ.50 லட்சம் அதற்குரிய வட்டி ஆகியவற்றுடன் சேர்த்து ரூ.85.50 லட்சத்துக்கான கடன் பாதுகாப்பை அளிக்க வேண்டும் இல்லாவிட்டால் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின், கட்டில், சோஃபா, பேன்கள், கீஸர், கிரைண்டர், மிக்ஸி, ஏர் கண்டிஷனர் உள்ளிட்ட பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என உத்தரவு பிறப்பித்தார்.