மெரீனாவில் போராட்டம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Monday,September 03 2018]
சென்னை மெரீனாவில் அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வந்தாலும் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய இந்த போராட்டத்தால் அன்றைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக டெல்லி சென்று ஜல்லிக்கட்டு நடத்த சட்டத்திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் மெரீனாவில் போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டது. இந்த தடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் சில நிபந்தனைகளுடன் சமீபத்தில் மெரீனாவில் போராட்டம் நடத்த ஐகோர்ட் அனுமதி அளித்தது. ஆனால் இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது. இதன்படி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றும், மெரினாவில் போராட்டம் நடத்த தனி நீதிபதி அளித்த அனுமதியை ஏற்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களை அதிகாரிகள் ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு எடுத்த நடவடிக்கை சரியே என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே இனியொரு போராட்டம் மெரீனாவில் நடக்க வாய்ப்பே இல்லை என்பதையே இந்த தீர்ப்பு உறுதி செய்கிறது.