8 வழிச்சாலை திட்டத்திற்கு நீதிமன்றம் தடை: தீர்ப்பை கேட்டு விவசாயிகள் ஆனந்தக்கண்ணீர்

சென்னையில் இருந்து சேலம் வரை ரூ.10ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு எட்டு வழிச்சாலை திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டபோது, அதற்கு விவசாயிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பை மீறி தமிழக அரசு அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தியதால் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அளித்தது.

இந்த தீர்ப்பின்படி சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என உத்தரவிட்டதோடு, 8 வழிச்சாலை திட்ட அரசாணையையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ரம் உத்தரவிட்டது. மேலும் வருவாய் ஆவணங்களில் மாற்றம் செய்து நிலத்தை மிண்டும் கையகப்படுத்தியவர்களின் பெயரில் இன்னும் 8 வாரங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை வரவேற்று சேலம், தர்மபுரி பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் தமிழக அரசு சார்பில் தங்களின் நிலத்தில் நடப்பட்டிருந்த அளவீட்டு கற்களையும் பிடுங்கி வீசினர். தங்களுடைய நிலம் திரும்ப கிடைத்தததால் நிலத்துக்குக் கற்பூரம் காட்டியும் நில உரிமையாளர்கள் வழிபட்டனர்.

இந்ததீர்ப்பு குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்தபோது, ''நாங்கள் சாதாரணமாக வெளியே போனால் கூட இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று போலீஸ் கண்காணித்தனர். அவர்களில் சிலர் எங்களை பயமுறுத்தவும் செய்தனர். இத்தனை நாட்கள் கழித்து இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறோம். விவசாய நிலத்தை அழித்துத்தான் திட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதில்லை. இந்த தீர்ப்பு, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நெடுவாசல் ஆகியவற்றுக்கும் முன்னுதாரணமாக அமையவேண்டும்'' என்று கூறினர்.