சர்கார் பட விவகாரம்: விஜய்க்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்
- IndiaGlitz, [Monday,July 09 2018]
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியாகியது. விஜய் புகை பிடிக்கும் வகையில் இருந்த இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் ரசிகர்களால் பெரும் வரவேற்புக்கு உள்ளானாலும் ஒருசில அரசியல்வாதிகள் இந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை அனுப்பிய நோட்டீஸ் எதிரொலியாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டரில் இருந்து டெலிட் செய்துவிட்டது.
இந்த நிலையில் புகைப்பிடிக்கும் போஸ்டர் குறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. பொதுமக்களை புகை பிடிக்க தூண்டும் வகையில் இந்த போஸ்டர் இருந்ததால் படக்குழுவினர் புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது
இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடந்தபோது, 'நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே விஜய் படம் பிரச்சனை இல்லாமல் வெளிவந்ததில்லை என்று கூறுவதற்கேற்ப 'சர்கார்' திரைப்படமும் தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ளது.