போஸ்டர் அடிச்சதெல்லாம் வேஸ்ட்டா? அரியர் தேர்வுகளை நடத்த ஐகோர்ட் உத்தரவு
- IndiaGlitz, [Wednesday,April 07 2021]
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது என்பது தெரிந்ததே. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அரியர் தேர்வுகள் ரத்து என்ற உத்தரவை ஏற்க முடியாது என்றும் உடனடியாக தேர்வை நடத்த பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெறவில்லை. இதனையடுத்து கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டின் தேர்வுகளை ரத்து செய்வதாகவும் அரிய்ர் உள்பட தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் பாஸ் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட ஒரு சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு அரியர் உள்பட தேர்வு கட்டணம் செலுத்தினால் பாஸ் என்ற உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எனவே கல்லூரி மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு நடைமுறையை பின்பற்றி தேர்வுகள் நடத்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கல்வியின் தரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்றும் இது குறித்து தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு கலந்து பேசி ஒரு சிறந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
அரியர் கட்டணம் செலுத்திய மாணவர்கள் உள்பட அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பின் காரணமாக மாணவர்கள் உற்சாகமாகி தமிழக முதல்வருக்கு போஸ்டர் மற்றும் கட்-அவுட்டுகள் எல்லாம் வைத்தனர் என்பதும் ஆனால் அவை அனைத்தும் வேஸ்ட்டா? என நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.