இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை? பேனரால் பலியான பெண் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!
- IndiaGlitz, [Friday,September 13 2019]
அரசியல் கட்சி பேனர் காரணமாக பலியான இளம்பெண் சம்பவம் குறித்து விசாரணை செய்ய நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணையில் ‘விதிகளை மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என முதல்வர் அறிக்கை வெளியிடலாமே? என்றும் இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் சென்னையில் நடந்த பேனர் விபத்து விவகாரத்தில் மாநகராட்சி, காவல் அதிகாரிகள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை மதியம் 2.15க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது . மேலும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள கட்சி கொடிகளை உடனே அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டு, கொடிகளை அகற்றி விட்டு பிற்பகலில் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் திமுக நிகழ்ச்சிக்காக யாரும் இனிமேல் கட்–அவுட், பிளக்ஸ் வைக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கட்–அவுட் வைக்கப்படும் கூட்டங்களிலோ, நிகழ்ச்சிகளிலோ நான் கலந்து கொள்ளமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.