நீர் சறுக்கல்… கடல் அலைகளை எதிர்த்து சாதனைப் படைத்து வரும் சென்னை வீராங்கனை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இனப்பாகுபாடு என்பது உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு நிகழும் சாதாரண நிகழ்வாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் நடுக்கடலில் எழும்பி வரும் நீர் அலைகளை எதிர்த்து நின்று விளையாடும் நீர்ச்சறுக்கல் (சர்ஃபிங்) போட்டிகளில் பெண்களைச் சாதாரணமாகப் பார்க்க முடியாது. ஆனால் ஹாலிவுட் படங்களில் பொழுது போக்குக்காக பெண்கள் சர்ஃபிங் போடும் காட்சிகளைப் பார்க்க முடியும். ஏனெனில் அது ரசனை. அதே பெண்கள் பெரும்பாலான சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வதை பார்க்க முடியாது. அதுவும் இந்தியா போன்ற கலாச்சார முக்கியத்துவம் உள்ள நாடுகளில் ஒரு பெண் சர்ஃபிங் விளையாடுவது நிச்சயமாக நடக்கவே நடக்காத ஒரு காரியம்.
அப்படி ஒரு சாதனையைத்தான் சென்னையைச் சேர்ந்த விலாசினி சுந்தர் செய்து வருகிறார். வளர்ந்து வரும் வீராங்கனையான இவர் இரண்டு முறை இந்தியா சார்பாக ஆசிய சர்ஃபிங் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் விலாசினி கடந்த வந்த பாதையை குறித்து seethepeople எனும் பத்திரிக்கை கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறது.
அதில், விலாசினி நீர் மற்றும் கடல் அலைகள் மீதான காதலை சிறு வயது முதலே கொண்டிருந்ததாகத் தெரிவித்து இருக்கிறார். ஸ்குவாஷ் வீராங்கனையான சின்னப்பாவின் தீவிர விசிறியான இவர் தனது ஆரம்ப வாழ்க்கையை நீச்சல் போட்டிகளில் கழித்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர் சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்தார். எனவே தொடர்ந்து கல்வியோடு சேர்ந்து மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களை குவித்து இருக்கிறார்.
தனது முதல் தேசிய பதக்கத்தை 10 வயதிற்கும் குறைவானவர்களுக்கான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்து இருக்கிறார். இந்நிலையில் 12 ஆம் வகுப்பை தாண்டும்போது தனது வாழ்க்கையில் மற்றவர்களைப் போல இருக்க விரும்பாமல் தனித்துவத்தையும் சவாலையும் எதிர் நோக்க வேண்டும் என முடிவெடுத்து சர்ஃபிங் மீது தனது கவனத்தைத் திருப்பி இருக்கிறார்.
அப்படி சர்ஃபிங் கற்றுக்கொள்ள நினைத்தபோது பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். காரணம் அது மிகவும் ஆபத்தான விளையாட்டு. அதுவும் பெண்கள் எல்லாம் இதற்கு தகுதியே இல்லை என்பது போன்ற விமர்சனங்களை எதிர்க் கொண்டிருக்கிறார். இதே கருத்தை பெண்கள் யாரும் கலந்து கொள்ளாத தனித்துவமான விளையாட்டு சர்ஃபிங். அதனால் அதில் நான் வெற்றிபெற வேண்டும் என முடிவெடுத்து தனது கனவை நோக்கி நகர்ந்து இருக்கிறார் விலாசினி.
நீச்சல் போட்டிகளுக்கான பயிற்சி பெற்றிருந்த விலாசினி முதலில் கடலில் நீந்த மிகவும் சிரமப் பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார். அதுவும் பெரிய கடலில் அலைகளுக்கு நடுவே சர்ஃபிங் போர்டை வைத்துக் கொண்டு அதில் சமநிலைப்படுத்தி நிற்பது மிகவும் கடினமாக இருந்திருக்கிறது. தனது அனுபவத்தில் அட்ரினலின் ரஷ் போன்ற உடல் உபாதைகளை சந்தித்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் தண்ணீரில் பல முறை விழுந்து, எழுந்து பல முயற்சிகளுக்கு பின்னர் உடலையும் மனதையும் ஒரே நேரத்தில் சமப்படுத்தி, அலைகளை எதிர்த்து போராடி தற்போது தனக்கென தனி முத்திரையை பதித்து இருக்கிறார். ஆனால் உலகம் முழுவதும் சர்ஃபிங் போன்ற ஆபத்தான விளையாட்டில் பல பெண்கள் கலந்து கொள்வதில்லை. அதையே ஒரு சாதனையாக எடுத்துக் கொண்டு தனி அடையாளம் பெற்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த விலாசினி.
முதன் முதலாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ஃபிங் சாம்பியன்ஷிப் ஏஎஸ்சி அட்டவணையில் இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் விலாசினிதான். அடுத்து சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் விலாசினி தெரிவித்து இருக்கிறார். சர்ஃபிங் விளையாட்டிற்காக நாள் கணக்கில் ஸ்கேட்டிங் பயிற்சியிலும் இவர் ஈடுபடுகிறார்.
பொதுவாக ஒரு விஷயத்தின்மீது தீவிரமான ஆர்வம் இருந்தால் அதுவே போதையாக மாறிவிடும் எனச் சொல்லப்படுவது உண்டு. அப்படித்தான் தற்போது விலாசினிக்கும் ஏற்பட்டு இருக்கிறது. தனித்துவமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு ஆபத்தான விளையாட்டைத் தேர்வு செய்த இவர் சர்ஃபிங்கை தனது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றி விட்டார். மேலும் ஆசியா சாம்பியன்ஷிப் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இந்தியா சார்பாக பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை தனது கனவாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் விலாசினி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments