கொரோனா காலத்தைப் பயன்படுத்தி… சமையலில் உலகச் சாதனை படைத்த சென்னை சிறுமி!!!

  • IndiaGlitz, [Thursday,December 17 2020]

 

கொரோனா காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் குழந்தைகள் அனைவரும் வீட்டிலேயே அதிக நேரம் செலவழிக்க வேண்டி உள்ளது. இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்தும் சில சிறுவர்கள் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி உலகச் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 58 நிமிடங்களில் 46 உணவுகளை சமைத்து உலகச் சாதனை படைத்து இருக்கிறார்.

சென்னையை சேர்ந்த சிறுமி எஸ்.என். லட்சுமி கொரோனா காலத்தில் தனது தாயாருடன் சமைக்க ஆர்வம் காட்டி இருக்கிறார். மேலும் பாரம்பரிய உணவுகளைத் தயாரிப்பது குறித்தும் அவர் தனது பெற்றோருடன் சேர்ந்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆர்வத்தைப் பார்த்த அவரது பெற்றோர் அனைத்து விதமான பாராம்பரிய உணவு வகைகளை சமைக்கக் கற்றுக் கொடுத்து இருக்கின்றனர். இதில் தேர்ந்த லட்சுமிக்கு உறுதியாக விருது பெற்றுத்தர வேண்டும் என முடிவெடுத்த அவளது பெற்றோர் யுனிகோ விருதுக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர்.

இதற்கான தேர்வில் கலந்து கொண்ட லட்சுமி வெறுமனே 58 நிமிடங்களில் 46 தமிழ் பாரம்பாரிய உணவுகளைச் சமைத்து யுனிகோ சாதனைப் புத்தகத்தில் தற்போது இடம் பிடித்து உள்ளார். முன்னதாக கேரளாவைச் சேர்ந்த சான்வி எனும் 10 வயது சிறுமி 30 உணவுகளைச் சமைத்து இந்த சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். சான்வியின் உலகச் சாதனையை முறியடித்து எஸ்.என் லட்சுமி 58 நிமிடங்களில் 46 உணவுகளைச் சமைத்து யுனிகோ விருதில் புதிய சாதனை படைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.