இன்று நள்ளிரவு முதல் சென்னையில் முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கலாம்?
- IndiaGlitz, [Thursday,June 18 2020]
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் இம்மாதம் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் எந்தெந்த வாகனங்கள் இயங்கலாம், எந்தெந்த அலுவலகங்கள் இந்த முழு ஊரடங்கில் இயங்கலாம், அதற்கான நிபந்தனைகள் என்ன என்பது குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளது
இதன்படி சென்னையில் வாகனங்கள் இயங்குவது குறித்து மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர மற்றும் அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி என்றும், சரக்கு வாகனங்களுக்கு அனுமதி என்றும், ஆனால் இந்த வாகனத்தை ஓட்டுபவர்கள் இ-பாஸ் உள்ளிட்ட அனுமதிச் சீட்டை பெரிய தாளில் நகலெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரீ பெய்ட் ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களை ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் இருந்து அழைத்து வர அனுமதிக்கலாம். ஆனால் 21, 28 ஆகிய இரு ஞாயிற்றுகிழமைகளிலும் எவ்வித தளர்வும் இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வங்கிகள், நிதி நிறுவனங்களின் தலைமையகங்கள் குறைந்த ஊழியர்களுடன் 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை குறைந்த ஊழியர்களுடன் இயங்கலாம். மேலாண்மை மற்றும் கண்காணிப்பு நிலை அலுவலர்களின் போக்குவரத்துக்காக தொழில்துறை மூலம் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். தொலை தொடர்பு, ஐ.டி. சேவை நிறுவனங்கள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கலாம். அந்த நிறுவனம் தரும் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்படும். எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள், பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அது தொடர்பான பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்