எண்ணூர் அருகே மோதிய கப்பல்கள் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Friday,February 03 2017]
சென்னை அருகே உள்ள எண்ணூரில் கடந்த வாரம் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிய விபத்தில் ஒரு கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் டன் கணக்கில் கடல்நீருடன் கலந்தது. இதனால் எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரையிலான கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மிதந்து வருகிறது.
இதனால் கடல்வாழ் உயிரினங்கள் லட்சக்கணக்கில் பாதிப்பு அடைந்துள்ளதால் எண்ணெயை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்துக்கு காரணமாக இரண்டு கப்பல்களையும் சிறைபிடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணை செய்த ஐகோர்ட், விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும் சிறைபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை அடுத்து உடனடியாக டான் காஞ்சிபுரம், பி.டபில்யூ மாப்பிள் ஆகிய இரண்டு கப்பல்களும் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கப்பல்கள் எண்ணூர் துறைமுக எல்லைக்குள் நிறுத்தப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.