50 பயணிகளை காப்பாற்றி உயிர்த்தியாகம் செய்த சென்னை பேருந்து ஓட்டுனர்

  • IndiaGlitz, [Wednesday,February 13 2019]

சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர் ஒருவர் பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பயணிகளின் பாதுகாப்பை கருதி பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு மரணம் அடைந்தார்.

சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர் சர்வேஸ்வரன். இவர் இன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தை கிளப்பி மதுரவாயல் வழியாக பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்படுவது போல் உணர்ந்த அவர், உடனே பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு, கண்டக்டர் மற்றும் பயணிகளிடம் தனது நிலையை விளக்கினார்.

உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்தில் மரணம் அடைந்தார். பேருந்தை நிறுத்தாமல் அவர் தொடர்ந்து இயக்கியிருந்தால் அந்த பேருந்தில் பயணம் செய்த 50 பயணிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

சர்வேஸ்வரன் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் கூடுதல் நேரம் பணிபுரிந்தாரா? அவருக்கு அலுவலகரீதியாக அழுத்தம் இருந்ததா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.