சென்னை தேவி தியேட்டர் மூடப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி
- IndiaGlitz, [Sunday,June 06 2021]
கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைனில் திருட்டுத்தனமாக புதிய படங்கள் ரிலீஸ் ஆவதால் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் வருவதில்லை என்றும் இதனால் திரையரங்குகளில் பல நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இனி எப்போது திரையரங்குகள் திறக்கும் என்பது குறித்த தகவலும் வெளிவராமல் உள்ளது. இதனால் பல திரையரங்க உரிமையாளர்கள் நஷ்டத்தில் உள்ளனர் என்பதும் ஒருசில திரையரங்குகள் திருமண மண்டபங்களாக மாறிவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே தமிழ்நாட்டில் பல திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையின் பிரபலமாக இருக்கும் திரையரங்குகளில் ஒன்றான தேவி தியேட்டர் மூடப்படுவதாக ஒருசில செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தேவி தியேட்டர் மூடப்படுவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் உண்மை இல்லை என மறுப்பு தெரிவித்து தேவி தியேட்டர் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தியேட்டரை நடத்தி வருகிறோம் என்றும், இந்த கொரோனா நேரத்திலும் கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது திரையரங்குகளை சுத்தப்படுத்தி வருகிறோம் என்றும் இதனை அனைத்து தரப்பினரும் அறியும் வகையில் வீடியோவாக வெளியிட்டு வருகிறோம் என்றும், எனவே தேவி திரையரங்கை நிரந்தரமாக மூடப் போவதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் கூறப்பட்டுள்ளது.