தற்கொலை செய்த கணவன், துக்கம் தாளாமல் குழந்தையை கொன்று தானும் இறந்த மனைவி..!

  • IndiaGlitz, [Saturday,December 14 2019]

டெல்லியில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு மெட்ரோ ரயில் நிலையத்தில் 30 வயது மதிக்கத்த நபர் ஒருவர், நேற்று காலை 11.30 மணியளவில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அந்த நபரை தடுக்க முயன்றுள்ளனர். கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட நபர், ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். அந்த நபர் பரத் என்பதும் நொய்டாவில் குடும்பத்துடன் வசித்து வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராக அவர் பணியாற்றி வந்துள்ளார்.தற்கொலை செய்துகொண்ட பரத், சென்னை நொளம்பூரைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. மனைவி சிவரஞ்சனி மற்றும் 5 வயது குழந்தையுடன் நொய்டாவில் வசித்து வந்துள்ளார். பரத்தின் சகோதரர் கார்த்திக்கும் டெல்லியில் இவர்களுடன் தங்கியுள்ளார். பரத், தற்கொலை செய்துகொண்ட விவரத்தை அவருடைய குடும்பத்தினருக்கு போலீஸார் தெரியப்படுத்தியுள்ளனர். மனைவி சிவரஞ்சனி, குழந்தை, சகோதரர் கார்த்திக் மூன்று பேரும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனையில் இருந்த உடலைப் பார்த்து இறந்தது பரத்தான் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

பரத்தின் முடிவு அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடையாளம் காட்டிய பின்னர், கார்த்திக் மட்டும் மருத்துவமனையில் இருந்துள்ளார். சிவரஞ்சனி குழந்தையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். கணவன் திடீர் மரணம், சிவரஞ்சனிக்கு கடும் வேதனையை ஏற்படுத்தியதியிருக்கிறது. அந்த வேதனையில் சிவரஞ்சனியும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். தன் குழந்தையைத் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார் அவர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ''பரத் குடும்பம் பொருளாதார சிக்கலில் இருந்ததாக அவரது சகோதரர் கூறியுள்ளார். வீட்டில் கைப்பற்றப்பட்ட உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். வீட்டில் இருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றனர்.