ஐடி வேலை பறிபோனதால் ஆடு திருடிய சென்னை இளம்பெண்: ஊரடங்கால் ஏற்பட்ட கொடுமை
- IndiaGlitz, [Wednesday,August 05 2020]
ஊரடங்கு காரணமாக நாட்டில் கோடிக்கணக்கானோர் வேலையின்றி வருமானம் இன்றி இருப்பதால் பசியின் கொடுமை காரணமாக சட்டவிரோத செயல்களை செய்ய பலர் துணிந்து விட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த ஐடி துறையில் பணிபுரிந்த இளம்பெண் ஒருவர் ஊரடங்கால் வேலை பறிபோனதால் பசியின் கொடுமை தாங்காமல் ஆடு திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை எண்ணூர் பகுதியில் அடிக்கடி ஆடுகள் காணாமல் போனதாக போலீசாருக்கு புகார்கள் வந்ததை அடுத்து இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் ஒரு பைக்கில் ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் ஆட்டை திருடி கொண்டு செல்வதை அந்த பகுதி மக்கள் பார்த்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்
இந்த நிலையில் இருவரும் போலீசாரால் விசாரணை செய்யப்பட்டபோது பைக்கில் வந்த தம்பதிகள் பெயர் கார்த்தி மற்றும் காவிரி என்றும் கார்த்தி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், காவேரி பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு ஐடி கம்பெனியில் வேலை செய்ததாகவும் தெரிவது
இருவருக்குமே லாக்டவுன் காரணமாக வேலை பறிபோய் விட்டதால் பசி காரணமாக ஆடுகளை திருடியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் காவிரி தற்போது முழு மாத கர்ப்பிணி என்பதால் மருத்துவ செலவிற்காகவும் பிரசவ செலவிற்காகவும் ஆடு திருடியதாக காவேரியின் கணவர் விசாரணையில் கூறியிருப்பது அதிர்ச்சியடைய வைப்பது மட்டுமின்றி சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
ஊரடங்கால் ஏற்பட்ட வறுமை காரணமாக ஐடி துறையில் பணிபுரிந்த இளம்பெண் ஒருவர் கணவருடன் சேர்ந்து ஆடு திருடியதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது