வீடு தேடி வரும் காய்கறிகள்: சென்னை மாநகராட்சியின் சூப்பர் திட்டம்
- IndiaGlitz, [Wednesday,April 08 2020]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும், ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் சென்னை பொதுமக்கள் பலர் அத்தியாவசியமான தேவையான காய்கறிகள் வாங்குவதற்கு கூட சிலர் வெளியே வராமல் உள்ளனர். மேலும் ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களில் பலர் காய்கறி வாங்க செல்வதாக கூறுவதும் போலீசார்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு வீடு தேடி காய்கறிகள் வழங்கும் திட்டம் ஒன்றை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்க, 07-04-2020 அன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்போடு நடந்த பேச்சுவார்த்தையில், 5,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 2,000 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலம் வீட்டிற்கே சென்று பொருட்கள் வழங்கும் நியாய விலை நடமாடும் அங்காடிகள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்த நடமாடும் அங்காடிகளில் செல்லும் வணிகர்கள், பொருட்களின் விற்பனையின் போது முகமூடிகள், கையுறைகள் போன்றவற்றை அணிந்து கொண்டிருப்பார்கள். சென்னை மாநகராட்சி சார்பாக, அந்த வணிகர்களுக்கு சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும். சென்னை மாநகராட்சியின் பதாகைகள் அந்த வாகனங்களில் வைக்கப்படும், மேலும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கு அந்த வாகனங்களுக்கு சிறப்பு வாகன அனுமதி சீட்டுக்கள் வழங்கப்படும்.
பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கையிலேயே தேவையான அனைத்து பொருட்களும் அவர்களுக்குக் கிடைக்க உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க வீட்டிற்கு உள்ளேயே இருக்குமாறு சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Announcement
— Greater Chennai Corporation (@chennaicorp) April 8, 2020
சென்னை மாநகராட்சியின் அங்கீகரிக்கப்பட்ட ‘நடமாடும் அங்காடிகள்’ உங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து வழங்கும்.#StayHomeStaySafe #Covid19Chennai #GCC #Chennai #ChennaiCorporation pic.twitter.com/xSHwYlStkA