கொரோனா பரிசோதனை செய்தாலே தனிமை: அரசின் அதிரடி அறிவிப்பால் சென்னை மக்கள் அதிர்ச்சி
- IndiaGlitz, [Thursday,June 11 2020]
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இன்று கூட தமிழகத்தில் 1875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 1407 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
இந்த நிலையில் சென்னையில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனாவின் பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால் சென்னையில் கூடுதல் கவனம் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் முதல் கட்டமாக சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யும் நபர்களுக்கு ஒரு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா பரிசோதனை செய்யும் நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் அவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றில் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டால் பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த அதிரடி அறிவிப்பு சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.