முழு ஊரடங்கு உத்தரவு நாட்களில் என்னென்ன இயங்கும்? சென்னை மாநகராட்சி விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளுக்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னையை பொருத்தவரை நாளை முதல் அடுத்த நான்கு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவின்போது எவை எவை திறந்திருக்கும் என்பது குறித்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 26.04.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 29.04.2020 புதன்கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படவுள்ளது. மேற்குறிப்பிட்ட முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட நடைமுறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
1.மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் செயல்படும்.
2. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.
3. இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவைப்படும் 33 சதவீதப் பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
4. அம்மா உணவகங்கள், ஏடிஎம் இயந்திரங்கள் வழக்கம் போல் செயல்படும்.
5. பொது விநியோகக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகள், எஃப்.சி.ஐ. கிடங்குகள் மற்றும் அவற்றின் சரக்குப் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.
5. பெட்ரோல், டீசல் பங்க்குகள் காலை 8 முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.
6. பால் விநியோகம், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் குடிநீர் வழங்கல் வழக்கம் போல் செயல்படும்.
7. உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
8. முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவிபுரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.
9. ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.
10. ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.
11.·கோயம்பேடு போன்ற மொத்த காய்கறிச் சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். அதேபோல், காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி இல்லை. மேற்கண்ட நாட்களில் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.
12. இறப்பு மற்றும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்காக வெளியூர் பயணம் மேற்கொள்ள இணையதளத்தின் வழியே மட்டுமே விண்ணப்பித்து அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதர காரணங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
13. பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழக்கம்போல் செயல்படலாம்.
மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட இதர அரசு அலுவலகங்கள் செயல்படாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments