புதிய தொழில்நுட்பத்தால் குட்டிக்காடுகளை உருவாக்கி அசத்தும் சென்னை மாநகராட்சி!!!
- IndiaGlitz, [Monday,August 03 2020]
மியாவாகி எனப்படும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காடு வளர்க்கும் முறைக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 96 வயது தாவரவியலாளர் மற்றும் தாவர வளர்ப்பு விஞ்ஞானி அகிர மியாவாகி தற்போது சென்னையில் 3 குட்டிக் காடுகளை உருவாக்கி இருக்கிறார். இவர் உலகம் முழுவதும் தான் உருவாக்கிய மியாவாகி எனப்படும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பல காடுகளை உருவாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இந்த காடு வளர்ப்பு முறை மிகவும் உகந்ததாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
மியாவாகி எனப்படுவது உள்ளூர் மர வகையினங்களை மிக நெருக்கமாகப் பயிரிடுவது ஆகும். பயிர்களை நட்டு குறைந்தது 3 வருடங்களுக்கு பராமரித்தால் போதுமானது. குறைந்தது 10 வருடங்களில் 30 மடங்கு அடர்த்தியுடன் இந்த காடுகள் வளர்ந்து விடும் எனக் குறிப்பிடுகிறார் மியாவாகி. 1993 முதல் மியாவாகி உலகில் பல்வேறு பகுதிகளில் இந்த வகை காடுகளை உருவாக்கியிருக்கிறார்.
அந்த வகையில் சென்னை அடையாறில் முன்னதாக 20 ஆயிரம் சதுரடி பரப்பளவில் புதிய காடு உருவாக்கப்பட்டது. இந்தக் காட்டில் 40 வகையான மரங்கள் நடப்பட்டு இருக்கிறது என்றும் அதில் 2000 மரக்கன்றுகள் இருக்கிறது என்றும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டு இருக்கிறது. அதைப்போல சென்னை, வளசரவாக்கத்தில் 6 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 700 மரக்கன்றுகளைக் கொண்டு மற்றொரு காடும் உருவாக்கப் பட்டு, வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தக் காட்டில் 45 வகையின மரங்கள் நடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சென்னை ஆலந்தூரில் மியாவாகி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மற்றொரு காட்டை சென்னை மாநகராட்சி உருவாக்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. 35 சென்ட் நிலப்பரப்பில் இந்தக் குட்டிக்காடு உருவாக்கப் படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. விணாகும் கழிவுநீரைச் சுத்திகரிப்பு முறையில் பயன்படுத்தி இந்தக் காடு வளர்க்கப் படுவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது. இதில் 2000 செடிகள் வளர்க்கப் படுவதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் உருவாக்கப் பட்டுள்ள 3 காடுகளால் 11.5 டன் கார்பன்டை ஆக்சைடு சுத்திகரிக்கப்படும் எனவும் 4 டன் ஆக்சிஜனைப் பெற முடியும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்த 10 வருடங்களில் இந்த மாற்றங்கள் நிகழலாம் என்ற நிலையில் சென்னையின் வேறு சில இடங்களிலும் இந்த வகையான காடுகளை உருவாக்கும் முயற்சி தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.