கேளம்பாக்கம் செல்ல ரஜினி இ-பாஸ் வாங்கினாரா? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,July 22 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது மகளின் குடும்பத்தினருடன் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றார் என்பதும், மாஸ்க் அணிந்து லம்போர்கினி காரை அவரே ஓட்டிச் சென்றதாகவும் புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வெளியானது என்பதும் இந்த புகைப்படங்கள் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது சென்னையில் இருந்து கேளம்பாக்கம் செல்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கிச் சென்றாரா? என்ற கேள்வியை சிலர் எழுப்பியுள்ளனர். இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ’நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா? என்பதை ஆய்வு செய்து தான் கூற முடியும் என்று கூறினார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் தேவை என்பது கட்டாயமாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் செல்ல காஞ்சிபுரம் மாவட்டத்தில் இ-பாஸ் வாங்கினாரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பிறகு அங்கிருந்து சென்னை வருவதற்கு இ-பாஸ் வாங்கினாரா என்பதையும் மாநகராட்சி ஆய்வு செய்யும்’ என்று நகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் கந்தசஷ்டிகவசம் குறித்து ரஜினிகாந்த் குரல் கொடுத்த நிலையில் இ-பாஸ் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.