சென்னையில் கோலம் போட்ட 6 மாணவிகள் கைது: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,December 29 2019]

குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை உள்பட தமிழக நகரங்களில் மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன.

இந்த நிலையில் இன்று காலை சென்னை பெசன்ட் நகர் பகுதியில் சில மாணவிகள் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலங்களை போட்டனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குடியுரிமை சட்டத்தை எதிராக கோலங்கள் போட்ட 6 மாணவிகளை கைது செய்தனர். அதன் பின் அவர்கள் விசாரணை செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் கோலம் போட்ட மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளத?ற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சென்னை பெசண்ட் நகரில் #CAA வுக்கு கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய, 6 பேரை அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைக்கூட அனுமதிக்காத இந்தத் தரங்கெட்ட எடப்பாடி அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும். மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும்!