கொரோனா பெயரை சொல்லி பேருந்து டிரைவரை பயமுறுத்திய கல்லூரி மாணவி: சென்னையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,March 14 2020]

பேருந்து டிரைவரிடம் உடனடியாக பேருந்து நிறுத்தும்படியும், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் கூறி பயமுறுத்திய கல்லூரி மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோவையிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்த போது அதில் சுஜிதா என்ற இளம்பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். மேல்மருவத்தூர் அருகே பேருந்து வந்தபோது திடீரென சுஜிதா பேருந்தை நிறுத்த சொன்னார். ஆனால் பேருந்து டிரைவர் நிறுத்த மறுத்துவிட்டார்

இதனை அடுத்து தனக்கு கொரோனா இருப்பதாகவும் மூன்று நாட்களுக்கு முன்னரே பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியதால் கடும் அதிர்ச்சியடைந்த பேருந்து டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். இதனை அடுத்து அந்த இளம்பெண் பேருந்திலிருந்து கீழே இறங்கி பின்னால் வந்த தனது நண்பர்களின் காரில் ஏறிச் சென்றுவிட்டார்

இந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பதை உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பேருந்து இருக்கும் பகுதிக்கு வந்து டிரைவரை பயமுறுத்திய இளம்பெண் குறித்த விவரங்களை அவரது முன்பதிவு மூலம் சேகரித்தனர். அப்போது அவர் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி பட்டம் படித்து வரும் மாணவி என்றும் நண்பர்களிடம் விளையாட்டாக சவால் விட்டு பேருந்து டிரைவரிடம் அவ்வாறு பயமுறுத்தியதாகவும் கூறினார்

இதனை அடுத்து அந்த கல்லூரி மாணவியை கடுமையாக எச்சரித்த போலீசார் இனியொருமுறை இவ்வாறு பயமுறுத்தினால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதன்பின் பேருந்து பயணிகளை சமாதானப்படுத்தி போலீசார் சென்னைக்கு அந்த பேருந்தை அனுப்பி வைத்தனர். விளையாட்டுக்காக நண்பர்களிடம் சவால் விட்டு பேருந்து டிரைவரை பயமுறுத்திய கல்லூரி மாணவியால் அந்த பகுதியில் சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது