சென்னை ஜவுளிக்கடை அதிபர் குடும்பத்தில் 20 பேருக்கு கொரோனா: 2 பேர் பலி
- IndiaGlitz, [Friday,June 26 2020]
சென்னையை சேர்ந்த ஜவுளிக்கடை ஒன்றின் உரிமையாளரின் குடும்பத்திலுள்ள 20 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தி நகர் பாண்டி பஜாரில் பிரபல ஜவுளி கடை ஒன்று கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளரின் குடும்பத்தில் 20 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதை அடுத்து இந்த கடையின் உரிமையாளர் தனது கடையை திறந்து வைத்துள்ளார். அப்போது வந்த வாடிக்கையாளர் ஒருவர் மூலம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவருடைய மனைவி மற்றும் மூன்று மகன்கள், மருமகள்கள் பேரக் குழந்தைகள் உள்பட மொத்தம் 20 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஜவுளி கடை உரிமையாளரின் 69 வயது மனைவியும், அவரது 42 வயது மகனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஜவுளி கடை உரிமையாளரின் தாயார் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டாலும் கடையை திறந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது இந்த ஜவுளிக்கடை குடும்பத்தினரால் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு பாடமாக கருதப்படுகிறது.