தரக்குறைவாக திட்டிய போலீஸ்: மனவேதனையில் கால்டாக்சி டிரைவர் எடுத்த அதிர்ச்சி முடிவு

  • IndiaGlitz, [Friday,February 01 2019]

சென்னை உள்பட பெருநகரங்களில் கால்டாக்சி ஓட்டும் டிரைவர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 12 மணி நேரத்திற்கும் மேல் சரியான தூக்கம், உணவு இன்றி பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ராஜேஷ் என்பவரை போலீஸ்காரர் ஒருவர் தரக்குறைவாக திட்டியதால் மனமுடைந்து ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். மரணத்திற்கு முன் அவர் பதிவு செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராஜேஷ் கூறியிருப்பதாவது:

‘இன்று காலை 8 மணியளவில் நான், அம்பத்தூர் பாடியிலிருந்து கோயம்பேடுக்கு காரில் சென்றபோது அண்ணாநகர் சிக்னலில் ஒரு பெண் ஊழியர் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு இன்னொருவருக்காக சிக்னல் அருகே காத்திருந்தேன். அப்போது, 2 காவல் துறையினர் வந்து காரை இங்கு நிறுத்தாதே என்று கூறியதால் உடனே காரை அங்கிருந்து எடுத்துக்கொண்டு கொஞ்சம் தூரம் தள்ளிப்போய் நிறுத்தினேன்.

அந்த சாலை காலியாக டிராபிக் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் மீண்டும் என்னருகே வந்த போலீஸ்காரர்கள் என்னைப் பார்த்து தரக்குறைவாக பெண் ஊழியர் முன் திட்டினர். உடனே நான், சார் உள்ளே பெண் இருக்கிறார் என்று கூறியதையும் பொருட்படுத்தாமல் காதால் கேட்க முடியாத வார்த்தைகளை கொண்டு திட்டினார். அந்த போலீஸ்காரரை என்னால் பதிலுக்கு திட்டமுடியும். ஆனால் அவர்கள் அணிந்திருந்த சீருடைக்காக மரியாதை கொடுத்தேன். போலீஸ்காரர் மட்டும் யூனிபார்ம் இல்லாமல் இருந்திருந்தால் நானும் பதிலுக்கு பதில் பேசியிருப்பேன்.

தவறு செய்தவர்களை கண்டிக்கும் பொருப்பில் உள்ள போலீஸே தப்பு பண்ணினால் என்ன செய்வது. அவரை யார் தண்டிப்பது? நீங்கள் வைப்பதுதான் சட்டமா? என்னோடு இது முடியட்டும். தரமணியில் இதுபோலத்தான் ஒரு டிரைவர் இறந்தார். அதன்பிறகு ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியவில்லை என்றால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிளம்புங்கள். அதிகாரத்தை, மக்களிடம் கொடுத்து விடுங்கள்' என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து மாநில மனித உரிமை ஆணைய நீதிபதியும் உறுப்பினருமான துரை.ஜெயசந்திரன், தாமாக முன்வந்து சென்னை பெருநகரப் போலீஸ் கமிஷனருக்கு இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நானகு வாரங்களுக்குள் அறிக்கையை விளக்கமாக சமர்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.,