சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்: பொதுமக்கள் அஞ்சலி!
- IndiaGlitz, [Tuesday,January 19 2021]
புகழ்பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும் சமூக சேவகியுமான டாக்டர் சாந்தா அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக இருந்து, சமூக சேவை செய்து வந்த டாக்டர் சாந்தா அவர்கள் சமீபத்தில் இதய நோய் சம்பந்தமான சிகிச்சை பெற அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து டாக்டர் சாந்தாவின் உடல் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் பொதுமக்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிக்காக டாக்டர் சாந்தா அவர்கள் மகசேசே, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் இந்த விருதுகளில் கிடைத்த பணம் முழுவதையும் அவர் மருத்துவ ஆராய்ச்சிக்காக செலவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த டாக்டர் சாந்தா அவர்களின் தாத்தாவின் சகோதரர் தான் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் என்பதும், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா என்பதும் குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் சம்பந்தமாக பல ஆராய்ச்சி கட்டுரைகளை டாக்டர் சாந்தா எழுதியுள்ளார் என்பதும் இந்த கட்டுரைகள் உலகம் முழுவதும் பிரபலம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.